மெலிந்த உருவம்... அடர்ந்த மீசை... நீண்ட தாடி... கீழ் அங்கியும், பச்சை நிற மேல்துண்டும், தலைப்பாகையுமே அவரது நிரந்தர உடை! சட்டை அணிவதில்லை! அப்போது வயதுதான் 75 ஆக இருந்ததே தவிர, அவரது பேச்சும், செயலும் துடிப்பு மிக்க இன்றைய 26 வயது இளைஞனையும் விஞ்சியிருந்தது. ’உழவன் தாத்தா’ என்ற செல்ல பெயரும் இவருக்கு உண்டு.
1938ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், இளங்கலை விவசாயம் பயின்று, கோவில்பட்டி அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.
ஒட்டுமொத்த அரசுத்துறையும் வேளாண் தொழில் நிறுவனங்களின் முகவர்களாக மாற்றப்பட்டதையும், ஒட்டுமொத்த வேளாண்மை வெளி இடுபொருள்களைச் சார்ந்து அதிக செலவு பிடிக்கும் தொழிலாக மாற்றப்பட்டதையும், வேளாண் நிலம் வேதி உப்புகளைக் கொட்டும் களமாக மாற்றப்பட்டதையும் கண்ட நம்மாழ்வார் இந்த அழிவுப் பணியில் தாமும் பங்குதாரராக இருக்க விரும்பாமல் அப்பணியிலிருந்து வெளியேறினார்.
இயற்கையோடு இயைந்த வாழ்வு, வெளி இடுபொருள்கள் சாராத தற்சார்பான வேளாண்மையே மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் என்று உணர்ந்த நம்மாழ்வார் அதைப் பரப்புவதையே தம் வாழ்நாள் பணியாக முடிவு செய்தார்.
இது அடுத்தடுத்தத் தளங்களில் அவருடைய கவனம் விரிவடையக் காரணமாயிற்று. அரசு முன்வைத்துள்ள கல்வி முறை, பொருளியல் கொள்கை, ஆட்சி முறை ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தற்சார்பை குலைத்து வருவதை எதிர்த்துப் போராடினால் அன்றி வேளாண்மையை மட்டும் தனியாக பாதுகாத்துவிட முடியாது என்று உணர்ந்த நம்மாழ்வார் பன்முகத் தளங்களில் தமது பணிகளை விரிவுபடுத்தினார். இயற்கையை பாதுகாக்கும் சூழலியல் போராளியாக மலர்ந்தார்.
1979ஆம் ஆண்டு “குடும்பம்’’ என்ற தொண்டு அமைப்பை நிறுவி இப்பணிகளைத் தொடங்கிய நம்மாழ்வார் அடுத்தடுத்து பல்வேறு அமைப்புகளை உருவாக்கி தமது பணிகளைத் தொடர்ந்தார். இறுதியில் கடவூர் அருகில் அவர் நிறுவிய “வானகம்’’ மாற்று வாழ்வியல் பயிற்சி நிலையமாக உருவானது.
வேளாண்மையிலிருந்து உழவர்களை வெளியேற்றும் நோக்கத்தோடு 2009ஆம் ஆண்டு திமுக அரசு கொண்டுவந்த வேளாண் மன்றச் சட்டம் சட்டமன்றத்தில் எந்த வேறுபாடுமில்லாமல் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. அதனை எதிர்த்து தமிழக உழவர் முன்னணி உள்ளிட்ட கட்சி சார்பற்ற உழவர் அமைப்புகள், சென்னையில் கூடி ஆலோசித்து அச்சட்டத்தை எதிர்த்து திண்டிவனம் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி உழவர் நெடும்பயணம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. இப்பரப்புரை போராட்டத்திற்கு தலைமையேற்க நம்மாழ்வார் இசைந்தார். அதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்ட நிலையில் தமிழக அரசு அச்சட்டத்தை திரும்பப் பெற்றது.
வேப்பமரத்தை மீட்டெடுத்தவர் என்ற பெருமையை கொண்டவர் இந்த உழவன் தாத்தா
வேம்பை அயல்நாட்டு நிறுவனம் காப்புரிமை பெற்றிருந்ததைக் கண்டு நம்மாழ்வாரும், வடநாட்டில் வந்தனாசிவா அம்மையாரும் கொதித்தெழுந்தார்கள். நாடெங்கும் இந்த அநீதியை எதிர்க்க மக்களை அணி திரட்டுவதில் பெருமுயற்சி மேற்கொண்டார்கள். உலக வர்த்தக அமைப்பு மாநாடு 1998 மே மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற போது அம்மாநாட்டு அரங்கத்திற்கு வெளியே சாலையில் அமர்ந்து இந்தியக் கொடியை கையிலேந்திக் கொண்டு நம்மாழ்வாரும் வந்தனா சிவாவும் நடத்திய ஆர்ப்பாட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது. வந்தனா சிவா தொடுத்த வழக்கின் காரணமாக வேம்பு தொடர்பான காப்புரிமை ரத்து செய்யப்பட்டது கவனத்திற்குரியது.
விவசாயம் என்பது வியாபாரம் அல்ல ..... அது ஒரு வாழ்க்கை முறை என்று ஆணித்தரமாகக் கற்பித்தவர் ஐயா நம்மாழ்வார்.
முல்லை பெரியாறு உரிமைப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட அனைத்து மக்கள் போராட்டங்களிலும் நம்மாழ்வார் பங்கு செலுத்தினார். மரபணு மாற்று விதைகள் குறித்து மிக சிக்கலான அறிவியல் செய்திகளை எளிமையாக விளக்கி அதனை எதிர்த்து மக்களைத் திரட்டியதில் நம்மாழ்வாரின் பங்கு தமிழ் நாட்டில் தலையாயது. டிசம்பர் 30, 2013 அன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து இயற்கையோடு இணைந்தார்.
ஜப்பானுக்கு ஒரு மசானபு ஃபுகோகோ என்றால், நம் தாய் தமிழ்நாட்டுக்கு ஐயா நம்மாழ்வார்தான். இயற்கை வழிகாட்டியாக இருந்தார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.
உயிர், உறவைப் பேணுவதுபோல் இயற்கைச் சூழலையும் பேணிக் காப்போம்.