கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் விவாத கூட்டத்தொடர் 10 நாள்கள் கூட முழுமையாக நடக்காத நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுமையாக நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் ஜூன் மாதம் அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், மழைக்காலக் கூட்டத்தொடர் பற்றிய விவாதம் எழுந்துள்ளது. ஆனால் மழைக்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு முழுமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடக்கும்.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கய்யா நாயுடுவும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அதில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை காணொலி காட்சியாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் பேசுகையில், ''கரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது பற்றி ஆலோசனை செய்தோம். பயணம் செய்வதில் பலருக்கும் சிரமம் உள்ளதால் காணொலி காட்சி மூலம் அவையை நடத்தவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை காணொலி காட்சி மூலம் அவையை நடத்த முடிவு செய்தால் அதற்காக சரியான தொழிற்நுட்ப வசதிகள் செய்யப்படும் '' என்றார்.