கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாடு அனைத்து நாடுகளிலும் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளை நேரடியாக எதிர்கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு என்95 ரக முகக் கவசம் வழங்க, அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எப்.டி.ஏ) என்95 முகக் கவசங்களை ஸ்டெர்லைசேஷன் (சுத்திகரிப்பு) செய்த பின்பு, மீண்டும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இதனால், சுகாதாரப் பணியாளர்களுக்கு 4 மில்லியன் என்95 முகக் கவசங்களை வழங்க முடியும். "ஸ்டெர்லைசேஷன் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது உபகரணங்களின் மீதியிருக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை சுத்தம் செய்து நீக்கும் செயல்முறையாகும்"
இந்த சுத்திகரிப்பு முறைக்கு, எப்.டி.ஏ அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் ( emergency use authorization ) வழங்கியுள்ளது. இதன்படி, என்95 முகக் கவசங்களை, பிளாஸ்மா ஸ்டெர்லைசேஷன் (ஸ்டெராட் ஸ்டெர்லைசேஷன்) முறையில் ஆவியாக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு வாயுவைக் கொண்டு சுத்திகரிக்க வேண்டும்.
இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எப்.டி.ஏ) ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், இந்த முறையை பயன்படுத்தி முகக் கவசங்களை சுத்திகரிப்பதால், கரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் மிகுந்த உதவியாக இருக்கும். லட்சக்கணக்கில் முகக் கவசங்கள் மறு பயன்பாட்டுக்கு வரும். இதனால், பாதுகாப்பான முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் வெளிமாநில தொழிலாலர்கள் மாபெரும் போராட்டம்