மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இணை மாநகராட்சி ஆணையர் ரமேஷ் பவார் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது மேஜையில் தண்ணீர் பாட்டிலும், சானிடைசர் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அவர், பட்ஜெட் குறித்து பேசுவதற்கு முன்பாக, தண்ணீர் குடிக்க விரும்பினார்.
பேசிக் கொண்டிருந்த வாக்கிலே, மேஜையிலிருந்த சானிடைசர் பாட்டிலை தண்ணீர் என நினைத்து குடித்துவிட்டார். உடனடியாக உதவியாளர்கள் அவரை எச்சரிக்க ஓடி வந்தனர். இருப்பினும், சானிடைசரை குடித்ததும் சுதாரித்துக் கொண்ட அவர் அதை விழுங்காமல், உடனடியாக கழிவறைக்கு விரைந்தார். பின்னர், வாயை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
ஒரு நிமிடத்தில் கூட்டம் நடைபெறும் வளாகம் பரபரப்பாக மாறியது. இணை ஆணையர் சானிடைசர் குடித்த காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்தன. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.
இதுகுறித்து பேசிய அவர், "இரண்டு பாட்டில்கள் மேஜையில் இருந்தன. இரண்டும் ஒரே மாதிரியாக இருந்ததால் தவறு நடந்துவிட்டது. குடித்த உடன் தவறை புரிந்து கொண்டேன். சானிடைசரை விழுங்கவில்லை" என்றார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக சானிடைசர் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.