மகாராஷ்டிரா மாநிலம் தெற்கு மும்பையை அடுத்து பிரீச் கேண்டி பகுதியில் கடலோர காவல் துறையினர் நள்ளிரவு 1.30 மணியளவில் வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சில்வர் ஓக்ஸ் எஸ்டேட் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவரும் 27 வயதுடைய கட்டட வடிவமைப்பாளர் ஒருவர் அப்பகுதியில் அருகே உள்ள போட் கிளப்பிற்கு பெரிய கத்தியுடன் சென்றுள்ளார்.
இதைப்பார்த்த காவலர்கள் அவரைத் தடுக்க முயற்சித்தனர். ஆனால், அந்த இளைஞர் தப்பித்து ஓடியதால் காவலர்கள் அவரைப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது அந்த இளைஞர் தன்னிடமிருந்த பெரிய கத்தியால் காவலர்களைக் கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பினார். இதனால், காவல் துறை அலுவலர்கள் இருவர் உள்பட மூன்று காவலர்களின் தோள்பட்டையிலும் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த துணை ஆணையர் பாதிக்கப்பட்ட மூன்று காவலர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் காவலர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இளைஞரைக் காவல் துறையினர் கைதுசெய்து அவரிடம் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: காற்றுக்காக திறக்கப்பட்ட கதவு... சிறுவனை தூக்கிச்சென்ற சிறுத்தை!