பிபிசிஎல் வசமுள்ள பங்குகளைப் பெற 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( 75 ஆயிரம் கோடி ரூபாய்) வரை முதலீடு செய்ய மேற்கண்ட நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்த விலைக்கு பிபிசிஎல்-இன் மூன்று சுத்திகரிப்பு ஆலைகள் முதலீட்டாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும். அதாவது மும்பை, கொச்சி (கேரளா), பினா (மபி) ஆகிய இடங்களில் அமைந்துள்ள 16,309 பெட்ரோல் பம்புகள், 6,113 எல்பிஜி விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவை முதலீட்டாளர்கள் வசம் ஒப்படைக்கப்படும்.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ராஸ்நெஃப்ட்டுக்கு பிபிசிஎல் தனது பங்குகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஸ்நெஃப்ட்டுடன் தொடர்புடைய நயாரா எனர்ஜி நிறுவனம் ஒரு ஆண்டில் 20 மில்லியன் டன் எண்ணெய் சுத்திகரிப்பை மேற்கொள்கிறது. எனவே அந்நிறுவனத்தின் சந்தை பங்கு உயர பிபிசிஎல் உதவும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஸ்நெஃப்ட்டின் தலைமை செயல் அலுவலர் இகோர் செச்சின், கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் நடைபெற்ற சந்திப்பில் பிபிசிஎல்-இன் பங்குகளைப் பெற விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனமும் பிபிசிஎல்-இன் பங்குளைப் பெற விருப்பம் காட்டி வருகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குஜராத்தின் ஜாம்நகர் பகுதியில் நடத்திவரும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பிபிசிஎல்-இன் பங்குகளை பெறுவது சிறப்பான செயல்பாடாக இருக்கும். எனவே ரிலையன்ஸ் நிறுவனமும் இதில் தீவிர நாட்டம் காட்டி வருகிறது.