முக்கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள 132 அடி உயர திருவள்ளுவர் சிலை அருகே தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும் என்பன உட்பட 25 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் இந்திய சுற்றுலாத்துறை இயக்குனர் மீனாட்சி ஷர்மாவிடம் டெல்லியில் அளித்தார்.
அதுமட்டுமன்றி 1000 ஆடி உயரம் அளவிலான தேசிய கொடியை நிறுவ வேண்டும், டெல்லியில் உள்ள இந்தியா கேட் போலவே தென் இந்தியா கேட் ஒன்றை கன்னியாகுமரியில் நிறுவ வேண்டும், திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே ரோப் கார் சேவை தொடங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் வசந்தகுமார் அளித்துள்ள கோரிக்கை மனுவில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அவர் அளித்த மனுவில் "வெளிநாட்டினர் உள்பட பலர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளாக செல்கின்றனர். வருகை அதிக அளவில் உள்ளதால் அங்கே வெளிநாட்டினர் உதவி மையம் ஒன்றை அமைக்க வேண்டும். பேட்டரி கார்கள் இயக்க வேண்டும். இந்திய சுற்றுலாத்துறை சார்பில் தங்கும் விடுதிகள் திறக்கப்பட வேண்டும். கன்னியாகுமரி முழுவதும் நவீன பொது கழிவறைகளை திறக்க வேண்டும். கன்னியாகுமரியின் பெருமையை விளக்கும் வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை-ராமேஸ்வரம்-கன்னியாகுமரி இடையே வட்டுக்கோட்டை, சாமிதோப்பு, சுசீந்திரம் வழியாக சர்க்யூட் ரயில் சேவை தொடங்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுக்கவும் வசந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தாக்குதலுக்குள்ளான காங்கிரஸ் மூத்தத் தலைவரின் வீடு!