மத்திய பிரதேச மாநிலம் ரேவா நகரத்தில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சாகேத் என்பவர் காணாமல் போனார். அவரை தேடிய அவரது குடும்பத்தினர், இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். காலம் செல்ல செல்ல அவர் ஒருபோதும் திரும்பி வரமாட்டார் என்று குடும்பத்தினர் நினைத்தார்கள். கணவர் திரும்பி வரமாட்டார் என நினைத்து சாகேத்தின் மனைவியும் உறவினர்கள் கட்டாயத்தின் பேரில் மறுமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், காணாமல்போன இளைஞன் குறித்து மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை உறுதிபடுத்திக்கொள்ள மேற்கொண்ட விசாரணையில், சாகேத் பாகிஸ்தானில் இருப்பது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இப்போது அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று குடும்பத்தினரிடம் அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் உள்பட அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக அவரது வருகைக்காக காத்திருக்கின்றனர்.