மத்தியப்பிரதேச மாநிலம், ஜமல்பூர் மாவட்டத்தில் உள்ள தல்ஹாரி பகுதியைச் சேர்ந்த விவசாயி பான்சி குஷ்வாஹா (50). இவர் கடந்த 16ஆம் தேதி கால்நடைகளுக்கு தீவனம் கொடுத்துவிட்டு தன் விளை நிலத்தைக் காண வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.
இதனிடையே, இவரைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சிலர் ஊரடங்கு அமலில் உள்ள போது ஏன் வெளியில் வந்தாய் எனக் கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு விவசாயி தந்த பதில் நம்பத்தகுந்ததாக இல்லை எனக்கூறி அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த குஷ்வாஹா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று, சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் உக்கியிடம் கேட்டபொழுது, "முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த விவசாயி படுகாயங்களுடன் ஏப்ரல் 19ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து அவர் புகார் அளிக்கவில்லை.
எனினும் அவரைத் தாக்கிய ஆறு காவல்துறையினர் கண்டறியப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வெளியான காணொலியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
அப்பாவி விவசாயி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கமல் நாத், "ஜமல்பூரைச் சேர்ந்த பான்சி குஷ்வாஹா என்ற 50 வயது விவசாயி மாடுகளுக்கு தீவனம் கொடுத்து விட்டு விளைநிலத்துக்குச் செல்லும் வழியில் சிவரஜ் சிங் அரசின் காவல் துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இதில் அந்த அப்பாவி விவசாயி உயிரிழந்துவிட்டார். விவசாயியின் உயிரிழப்புக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : 80% கரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் தென்படவில்லை - சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்