ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் மோபிதேவி லங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வர ராவ். இவர் அருகே உள்ள பெடபுலிபகா கிராமத்தில் சில ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வயிற்றுப் பகுதியில், தொற்று இருந்த காரணத்தினால் விஜயவாடாவில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உடல் சொந்த ஊரான மோபிதேவி லங்காவுக்கு தனியார் ஆம்புலென்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் இறந்தவருக்கு கரோனா தொற்று இருக்கும் என்ற அச்சத்தில், அப்பகுதி மக்களும் இறந்தவரது சகோதரர் உள்பட உறவினர் யாரும் வீட்டில் உடலை வைக்க அனுமதிக்கவில்லை. இதன் பிறகு ஆம்புலென்ஸ் ஆட்களும் உடலை சாலையோரம் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் இறந்தவரது மனைவி சாலையிலேயே கதறி அழுதுள்ளார்.
இதன் பிறகும் ஒருவரும் உடலை எடுக்க வராததாகக் கூறப்படுகிறது. மேலும் உடலை தற்போது வசித்து வரும் இடத்திற்கு கொண்டுபோகச் சொல்லி, உறவினர் கூறியுள்ளனர். வெங்கடேஷ்வர ராவ் உடல் நலக்குறைவால் இறந்தார் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியும் அவரது உறவினர்கள் மனம் இரங்கவில்லை. அதன் பிறகு வேறு வழியின்றி அவரது உடல் பெடபுலிபகாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இதையும் படிங்க... கரோனா அச்சம் காரணமாக கர்ப்பிணியை அனுமதிக்காத மருத்துவமனை