டெல்லி: நாடு முழுவதிலும் இந்தாண்டு இரண்டு வாரங்களுக்கு முன்பே, பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பருவ மழைக் காலம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. எதிர்பார்த்த தேதியை விட இரண்டு வாரங்கள் முன்னதாகவே நாடு முழுக்க இந்தாண்டு பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜூன் 26) ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் பருவ மழை பெய்தது.
டெல்லி, ராஜஸ்தானின் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
வழக்கமாக ஜூன் ஒன்றாம் தேதி, தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்யும். ஆனால், இந்தாண்டு முன்கூட்டியே பெய்யத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று நாள்களுக்கு டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் மழை அளவு குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
நேற்று (ஜூன் 25) கடும் இடியுடன் கூடிய கனமழை காரணமாக, மின்னல் தாக்கி, பிகாரில் 88 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"2013ஆம் ஆண்டில், ஜூன் 16 அன்று பருவமழை நாட்டை சூழ்ந்தது. இதில் உத்தரகாண்ட் பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கியது. அதன் பிறகு இந்தாண்டு பருவமழை விரைவாக வந்துள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா கூறியுள்ளார்.