சந்திரயான்-2 திட்டத்தின் கீழ் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்குச் சிறிது தூரமே இருந்த நிலையில், அதன் சிக்னல் தொடர்பை இழந்தது.
இதற்கிடையே, விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிவிடும் என்ற எதிர்பார்ப்புடன் பிரதமர் மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கே நேரில் சென்றார். இதனால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பும், பதற்றமும் தொற்றிக்கொண்டது.
ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக நிலவிற்கு சிறிது தூரம் மட்டுமே இருந்தபோது, விக்ரம் லேண்டர் தரையிறங்காமல் போனது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, இஸ்ரோ மையத்திற்கு மோடி வந்ததால் அவரின் கெட்ட சகுனமே விக்ரம் லேண்டர் தரையிறங்காமல் போனதற்கு காரணம் என்றும், விளம்பரம் தேடுவதற்காகவே அவர் இஸ்ரோ வந்ததாகவும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.