லே (லடாக்): மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, முதல் முறையாக இரண்டு நாள்கள் பயணமாக யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பல்வேறு கலாசார நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கு சட்டப்பிரிவு 370 தடையாக இருந்தது” எனக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “370ஆவது பிரிவு ஒழிக்கப்பட்ட பின்னர், ஜம்மு-காஷ்மீர், லே மற்றும் கார்கில் பகுதிகளில் 75,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
50 புதிய கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு லட்சம் மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒரு புதிய மருத்துவக் கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் தேசிய திறன் பயிற்சி நிறுவனும் லடாக்கில் நிறுவப்பட உள்ளன” என்றார்.
மேலும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து அவர் கூறுகையில், “ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தின் கீழ் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது 17 சிறப்பு கோவிட் மருத்துவமனைகள் மற்றும் 60 ஆயிரம் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர், லே-லடாக் பகுதியைச் சேர்ந்த சுமார் 2.5 லட்சம் மக்கள் தொற்றுநோய்களின் போது தங்கள் வீட்டிற்குத் திரும்புவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: மதச்சார்பற்ற நாடாக இந்தியா திகழ்வதற்கு இந்துக்களே காரணம் - மத்திய அமைச்சர்