சுதந்திர போராட்ட வீரரும், நாட்டின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது மான் கி பாத் நிகழ்ச்சியில், "ஒரே இந்தியா, வளமான இந்தியா தான் நமது கனவு. அதற்காக ஆண்டுக்கு ஒருமுறை 'ரன் பார் யூனிட்டி' எனும் மாரத்தான் போட்டியை மத்திய அரசு நடத்துகிறது. நாட்டின் ஒற்றுமைக்காக மக்கள் அதிகளவில் இதில் பங்கேற்க வேண்டும். கிராமங்கள்தோறும் உள்ள பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் லட்சக்கணக்கில் மாரத்தான் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
ஏற்கனவே, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது. நமது வாழ்வை நம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நாளாக அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பல பெண்கள் மிகச் சிறந்த பணிகளை செய்துவருகின்றனர். அவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக #BharatkeLakshmi என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்துங்கள்" என்றார்.