இந்தியாவில் 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று வெளியானது. பாஜக 352 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் தனிப்பெரும்பான்மை முறையில் ஆட்சியை அமைக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சியை அமைக்க இருக்கிறது. இந்நிலையில், மோடி மீண்டும் பிரதமராக உறுதியான ஓரிரு நாட்களிலேயே, அடுத்த ஆறு மாதங்களுக்கு மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்த அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அவை பின்வருமாறு: வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிர்கிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி அங்கு நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்கிறார். ஜூன் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பான் நாட்டில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். ஆகஸ்ட் மாதம் இறுதியில் பிரான்ஸ் செல்கிறார். செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யா செல்லும் மோடி, மூன்றாவது வாரத்தில் அமெரிக்கா செல்கிறார். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 4ஆம் தேதி பாங்காக், 11ஆம் தேதி பிரேசில் செல்ல இருக்கிறார்.
2014-2019 வரையான முந்தைய ஆட்சியின்போது மோடி 55 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில், பல முறை சென்ற நாடுகளுக்கே மீண்டும் திரும்ப பயணம் செய்துள்ளார். இவரது வெளிநாட்டு பயணத்தில் சுமார் ரூ. 2,021 கோடி செலவானதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்தியாவில் உயர் பதவி பொறுப்பு வகிக்கும் தலைவர்களுக்காக இரண்டு போயிங் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. எனவே, வெளிநாட்டு பயணத்தின்போது மோடி போயிங் விமானத்தை பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்திய பிரதமராக மோடி இன்னும் பதவிக்கூட ஏற்கவில்லை. அதற்குள் வெளிநாட்டு பயணமா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இது குறித்து பலவிதமான புகைப்படங்களுடன் மோடியை கிண்டல் செய்தும் வருகின்றனர்.