இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் கோவிட்-19 தொற்றுநோய் உண்டாக்கியுள்ள சுகாதார நெருக்கடியை சமாளிக்க, அந்தந்த அரசாங்கங்கள் பின்பற்றும் வழிமுறைகள் குறித்தும் விவாதித்தனர்.
மேலும் கரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சாத்தியமான ஒத்துழைப்பை வழங்குவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் மருந்து பொருள்கள் கிடைப்பதை மேம்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாடு ஆகியவை அடங்கும். இதுபோன்ற சூழ்நிலைகளை ஆராய்வதற்காக ஒரு தகவல்தொடர்பை பராமரிக்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.
நவீன வரலாற்றில் கோவிட்-19 தொற்றுநோய் ஒரு முக்கியமான திருப்புமுனை மட்டுமின்றி ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலன்களை மையமாகக் கொண்ட உலகமயமாக்கலின் மீது புதிய பார்வையை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது நெதன்யாகுவும் ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையில், இந்தியாவில் மொத்தம் உறுதிப்படுத்தப்பட்ட கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 2,547 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க கோவிட்19 தொற்று நோயாளிகள் 12 லட்சத்தை நெருங்குகின்றனர்.
உயிரிழப்பு 60 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. கோவிட்19 வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் பூட்டுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1500 பேர் மரணம்