நாடு முழுவதும் ஊரடங்கை அடுத்து அவரவர் சொந்த மாநிலத்திற்கு திரும்பிய குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ஆத்மநிர்பார் உத்தரப் பிரதேசம் ரோஜ்கர் அபியான்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 26) தொடங்கினார். முதல்கட்டமாக ஒரு கோடிக்கும் அதிகமான உத்தரப் பிரதேச மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலி சந்திப்பில் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மேற்கொண்ட பணிகள் இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட அம்மாநிலத்தில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க பெருமளவில் கைக்கொடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகள் முன்னெடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காட்டிலும் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தது. அதன் குடிமக்களை தொற்றுநோயிலிருந்து காப்பாற்றுவதற்கான 100 விழுக்காடு உழைப்பை செலுத்தியது. பேரழிவை தடுத்து நிறுத்தியது.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற மாநிலங்கள் இன்னும் போராடி வரும் நிலையில், உத்தரப் பிரதேச அரசு பொருளாதாரத்தை முன்னேற்ற வளர்ச்சித் திட்டங்களை நோக்கி தன் பார்வையை செலுத்தி உள்ளது. நாட்டின் பிற மாநிலங்களும் இந்த அணுகுமுறையிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மாநில மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், வங்கி மற்றும் அஞ்சல் அலுவலக ஊழியர்கள், போக்குவரத்துத் துறை, குடிபெயர்ந்த தொழிலாளர்கள் போன்றவர்கள் இந்த அச்சுறுத்தலை முழுமையாக வெற்றிக்கொள்வர்" என்றார்.