காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பொறுப்பை வகித்துவரும் சோனியா காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவரை விமர்சித்து, அவரின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த சுவரொட்டியில், “இக்கட்டான நிலையிலும் சோனியா காந்தியை காணவில்லை. பணக்காரராக இருந்து என்ன பயன். தொகுதி மக்களுக்கு நிதி ஒதுக்க மனம் வரவில்லையே” என்று எழுதப்பட்டிருந்தது. இருப்பினும் அந்தச் சுவரொட்டியில் அச்சகத்தின் உரிமையாளர் பெயரோ அல்லது சுவரொட்டியை அச்சடித்தவர் பெயரோ இடம்பெறவில்லை.
இது அரசியல் எதிரிகளின் மலிவான அரசியல் என காங்கிரஸ் கட்சி சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் கமல்சிங் சவுகான், “கரோனா தொற்றுவிலிருந்து மக்களை பாதுகாக்கும் அனைத்து நிதி உதவிகளையும் சோனியா காந்தி அளித்துவருகிறார்.
இது அரசியல் போட்டியாளர்களின் மனநிலையை குறிக்கிறது. இந்த நெருக்கடி நிலையை அவர்கள் பயன்படுத்த நினைக்கின்றனர். சோனியா காந்தி எப்போதும் மக்களோடு இருக்கிறார். அந்த மக்களுக்கு உண்மை தெரியும். இது போன்ற அரசியலில் சோனியா காந்தி ஈடுபட மாட்டார்” என்றார்.
மேலும், “இந்த சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம்” என்றும் அவர் கூறினார்.