நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தைத் தொட்டுவருகிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா சிறப்பு சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு டெல்லியில் அமைந்துள்ள கரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயது சிறுமி, அதே முகாமில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நபரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய தெற்கு டெல்லியைச் சேர்ந்த கூடுதல் துணை ஆணையர், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர் தொற்றிலிருந்து முழுவதுமாகக் குணமடைந்தவுடன் கைது செய்யப்படுவார் என்றும் கூறினார்.