புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனமான பாண்லே நிறுவனம் குருமாம்பட்டில் இயங்கிவருகிறது. இங்கு 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். நாளொன்றுக்கு காலையில் 60 ஆயிரம் லிட்டர் பாலும் மாலையில் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்து புதுச்சேரி முழுவதும் விநியோகிக்கப்பட்டுவருகிறது.
இதுமட்டுமல்லாது ஐஸ்கிரீம், நெய், பன்னீர் போன்ற பால் பொருள்களும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சாரங்கபாணி கடந்த இரண்டு மாதங்களாக அலுவலகத்திற்கு வந்து கோப்புகளில் கையெழுத்து இடாத காரணத்தினால் மூலப்பொருள்கள் வாங்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து மேலாண் இயக்குநரை மாற்றக்கோரி ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் எந்த வாகனத்தையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் மாலை வேளையில் விநியோகிக்க வேண்டிய 60 லிட்டர் பால் வெளியே கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மதியம் 1 மணிக்கு பூத்களுக்கு வர வேண்டிய பால் வரவில்லை. இதனால் பாண்லே பால் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. இதனிடையே ஊழியர்களை சமாதானப்படுத்த வந்த சட்டப்பேரவை உறுப்பினர் தீர்ப்பான் அங்கிருந்து ஊழியர்களால் விரட்டப்பட்டார்.
ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்ததால் குருமாம்பேட் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனிடையே கூட்டுறவு பதிவு அலுவலர்களும் காவல் துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் வரும் நான்காம் கூட்டுறவு பதிவாளர் முன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. வருகிற 4ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிடில் ஏழாம் தேதி மீண்டும் போராட்டம் தொடரும் என அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.