இந்தியா முழுவதும் கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் வகையில், பலகட்டமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். போதிய பண வசதியில்லாமல் ஏராளமானோர் நடந்தே செல்கின்றனர்.
இந்த நடைபயணத்தில் உடல்நலக் கோளாறு, விபத்துகள் மூலம் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. நேற்று முன் தினம் ராஜஸ்தானிலிருந்து உத்தரப்பிரதேசம் சென்ற லாரி எதிரே வந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், மீண்டும் தொழிலாளிகள் டெல்லி, உத்தரப் பிரதேச எல்லையில் கூடியிருப்பது அச்சமூட்டுகிறது.
இது குறித்து உத்தரப்பிரதேச துணை காவல் ஆய்வாளர் பிரசந்தா தியாகி, 'காஜீப்பூரில் சொந்த ஊருக்குச் செல்ல தயாராகி மக்கள் கூட்டம் திரண்டது. மக்களைப் பேருந்து (அ) ரயிலில் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தினோம். அவர்களில் ஒருவரிடம் கூட, மாநிலத்தினுள் நுழைவதற்கான முறையான பாஸ் (அனுமதிச்சீட்டு) இல்லை' என்றார்.
முன்னதாக காவல் கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) பிவி ராமசாஸ்திரி, சொந்த ஊர்களுக்கு கால்நடையாகப் புறப்படும் தொழிலாளர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மத்திய அரசு அறிவிப்பால் பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு அதிகரிக்கும் - டி.எஸ். ஹூடா