டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவியதால், அவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அனைத்து மாநிலங்களும் மருத்துவ சிகிச்சையளித்து வருகின்றன. இதனிடையே மாநாட்டில் கலந்துகொண்ட ரோஹிங்கியா அகதிகள் குறித்த விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் சேகரித்து வருகிறது. இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், '' டெல்லி சமய மாநாட்டில் கலந்துகொண்ட ரோஹிங்கியா அகதிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதனால் ரோஹிங்கியா நிவாரண முகாம்கள் அமைந்துள்ள தெலங்கானா, ஹரியானா, டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களில் மாநாட்டிற்குச் சென்றுவிட்டு இன்னும் அங்கு திரும்பாத ரோஹிங்கியா அகதிகள் குறித்த விவரங்களை உடனடியாகச் சேகரிக்க வேண்டும்.
இவர்களை உடனடியாக அடையாளம் கண்டு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதா என்று பரிசோதனை செய்து, தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் அளிக்க வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் உள்ளனர். அதில் 17,500 பேர் மட்டுமே அகதிகளாக தங்களை ஐநா அமைப்பில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரோஹிங்கியா அகதிகள் நாடு கடத்தல்? மத்திய அரசிடம் விளக்கம் கேட்ட உச்ச நீதிமன்றம்