கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஒன்பது லட்சத்து 36ஆயிரத்து 181 பேர் பாதித்தும், 24ஆயிரத்து 309பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் அதிக மனித கடத்தல் தடுப்பு அமைப்புகளை அமைக்கும்படி உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், “கரோனா காலத்தில் ஏழைகளை குறிவைத்து மனித கடத்தல் நிகழ வாய்ப்புள்ளது. இதில் நல்ல வேலை, சம்பளம், உணவு தருவதாக கூறி மக்கள் கடத்தப்பட வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளை கடத்தி பாலியல் தொழில், வீட்டு வேலைகளுக்கு என அடிமைகளாக நடத்த வாய்ப்புள்ளது. அதனால் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் உள்ள மனித கடத்தல் தடுப்பு அமைப்புகளை விரிவுப்படுத்தவும், அதிகமாக அமைக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கிராமத்தில் வசிக்கும் நபர்கள் பற்றி முழுமையான தகவல்களை பராமரிக்கவும், கிராமங்களில் மக்கள் நடமாட்டங்களை கண்காணிக்கவும் பஞ்சாயத்தை மாநில அரசு அறிவுறுத்தலாம் என்றும், தேசிய குற்றப்பதிவு அமைப்பக செயலிகளின் உதவியுடன் மாநில காவல் துறை பணியாற்றலாம் எனவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து தேசிய குற்றப்பதிவு அமைப்பக அலுவலர் ஒருவர் கூறுகையில், “2018ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் சுமார் நான்காயிரம் மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் ஆவர்.
தேசிய குற்றப்பதிவு அமைப்பின் கணக்கின்படி 2011 முதல் 2019வரை 38 ஆயிரத்து 503 பேர் மனித கடத்தலில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமின்றி சிலர் டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில் வீட்டு வேலைக்கு அடிமைகளாக செல்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க...'கரோனா காரணமாக மேலும் 132 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்ககூடும்' - ஐ.நா. எச்சரிக்கை!