உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. நேற்று டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து ஹைதராபாத் (தெலங்கானா மாநிலம்) வந்த 24 வயது கர்நாடக மாநிலப் பயணிக்கு, இந்நோய் இருப்பதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்த பயணி, அலுவல் நிமித்தமாக துபாய் சென்றுள்ளார். பின்னர் ஹைதராபாத் வந்த அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பு கொண்ட சுமார் 80க்கும் மேற்பட்ட நபர்களும் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நோய் பாதிப்பு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவற்றில் பரவாமல் இருக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உஷார் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறிப்பாக, பெங்களூரு உஷார் நிலையில் உள்ளதாகவும் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: போக்குவரத்து வீதிமீறல் ஒரே நாளில் ரூ. 1 கோடி வசூல்!