கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, மேதக் மாவட்டத்தைச் சேர்ந்த கதீட்ரல் தேவாலயத்தில், பல்லாயிரக்கணக்கானோர் குழுமியிருப்பதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. கிறிஸ்துமஸ் மரங்கள், தேவாலயம் முழுவதும் கண்கவர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயத்திற்கு வருகைதரும் அனைவரையும் கவரும் விதத்தில், தேவாலாய நிர்வாகம் இந்த விழாக்காலப் பணிகளை மேற்கொண்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினமான நாளை மாலை, நான்கு மணியளவில் தொடங்கவுள்ள, தேவாலயத்தின் உட்பகுதியில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வில், தென் இந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களும், வெளிநாட்டுப் பயணிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் 5000 முதல் 6000 நபர்கள்வரை சென்று தரிசிக்கவல்ல இந்த கதீட்ரல் தேவாலயத்தில், பக்தர்களின் எண்ணிக்கையைக் கணக்கில்கொண்டு, தேவாலயத்தினுள் சென்று வழிபட முடியாதவர்களுக்கும், வெளியிலிருந்தே நிகழ்வுகளைக் கண்டுகளிக்க வழிவகுக்கும் விதமாக எல்சிடி திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நீர் சுத்திகரிப்பு ஆலை ஏற்கனவே தேவாலயத்தில் உள்ளநிலையில், விழாவின்போது ஆட்டோக்கள் மூலமும், தண்ணீர் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வருடா வருடம் இவ்வளவு வழிப்பாட்டாளர்களை ஈர்த்துவரும் இந்த கதீட்ரல் தேவாலயம், 1914ஆம் தொடங்கி 1924ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டதாகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சி.டபிள்யூ. போஸ்நெட் என்பவர் தேவாலயத்தை நிறுவியுள்ளார்.
மேதக் பகுதியில் அன்றைய காலக்கட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் வேலைவாய்ப்பற்று தவித்து வந்த அப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் விதத்தில் இந்த தேவாலய கட்டுமானப் பணிகளை போஸ்நெட் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
வெள்ளைநிற கிரானைட் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயத்திற்கு மேலும் அழகு சேர்க்கும் விதத்தில், அதன் ஜன்னல் கண்ணாடிகளில் கிறிஸ்து பிறப்பு, தேவதூதர், அன்னை மேரி மற்றும் ஜோதிடர்கள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல் உள்ளிட்ட பைபிள் கதைகளும் வரையப்பட்டு சிறப்புடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் அளித்த கோலி