டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர்களின் எண்ணிக்கையை 50 விழுக்காடாகக் குறைக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. அதேபோல், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முடிவுவெடுக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கை குறைப்பு நடவடிக்கை ஏழு நாள்களில் அமல்படுத்தப்படும் என அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், "ராஜாங்க மற்றும் தூதரக ரீதியான இருநாட்டு உறவைப் பேணும் வகையில் போடப்பட்ட வியன்னா ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் செயல்படவில்லை. அதற்கு நேரெதிராக அண்டை நாடுகளில் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் ஆதரிக்கும் வகையில் அந்நாடு செயல்பட்டுள்ளது.
சமீபத்தில், பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்களைத் துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்று கடுமையைாக நடந்துகொண்டது இதற்கு எடுத்துக்காட்டாகும். உளவு பார்க்கும் வேலையில் ஈடுபட்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டுள்ளனர். மே 31ஆம் தேதி, உளவு பார்த்த இரண்டு பாகிஸ்தான் அலுவலர்கள் கையும்களவுமாகப் பிடிக்கப்பட்டனர். இது மற்றொரு எடுத்துக்காட்டு" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம், இரண்டு இந்தியத் தூதரக அலுவலர்கள் இஸ்லாமாபாத்தில் மாயமானார்கள். இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர், அவர்கள் விபத்தில் சிக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அவர்களைப் பிடித்துவைத்து துன்புறுத்தியதாக இந்தியா தகவல் வெளியிட்டது. ஜூன் 22ஆம் தேதி, அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினர்.