காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெட்போரா என்ற இடத்தில் கடந்த 2019 பிப்ரவரி 14ஆம் தேதி, பயங்கரவாதிகளால் மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
உட்சபட்ச பாதுகாப்பு நிறைந்த காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இந்த வழக்கை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக, கடந்த ஜூலை மாதம் ஏழாவது குற்றவாளியாக பிலால் அகமது குச்சேவை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. தேசிய புலனாய்வு முகமையின் கூற்றுப்படி, பிலால் ஜம்மு காஷ்மீரின் ஹஜிபால் பகுதியில் ஆலை ஒன்றை நடத்தி, அதில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்தது தெரியவருகிறது.
இந்நிலையில், 2019 புல்வாமா தாக்குதல் தொடர்பாக ஜம்முவில் உள்ள என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) நீதிமன்றத்தில், தேசிய புலனாய்வு முகமை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சுமார் 13,500 பக்கங்கள் கொண்ட இக்குற்றப்பத்திரிகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மசூத் அசார், அவரது சகோதரன் அப்துல் ரவூப் அஷ்கர், முகம்மது உமர் பாரூக், தற்கொலை வெடிகுண்டாக மாறிய ஆதில் அகமது தார் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவர்களைத் தவிர பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பல பயங்கரவாதிகளின் பெயர்களும் இந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றள்ளன.
இதையும் படிங்க: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க கைகோர்க்கும் அரசியல் கட்சிகள்!