2009ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மாயாவதி அரசு பொதுமக்களின் பணத்திலிருந்து ரூ.2000 கோடியை செலவழித்து உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் தனக்கும், பகுஜன் சமாஜ் சின்னமான யானைக்கும் சிலை அமைத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும் அந்த மனுவில் மாநில அரசின் வரவு செலவுத்திட்டத்தை தனது சொந்த தேவைக்காக எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாயாவதி சிலைக்காக செலவழித்த பொதுமக்களின் பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் மாயாவதி இன்று பிரமாணப்பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பொதுமக்களின் விருப்பத்தினால்தான் சிலை வைத்தேன் என்றும், தலித் பெண்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தனக்கு சிலை வைக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் விரும்பியதால் இது நிகழ்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்திற்காக யானை சிலை அமைக்கப்படவில்லை எனவும், இந்திய பாரம்பரிய கட்டடக்கலை சின்னத்தில் யானை இடம் பெற்றுள்ளதால் சிலை நிறுவப்பட்டது எனவும் மாயாவதி விளக்கமளித்துள்ளார்.