லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த 20 பாதுகாப்புப் படை வீரர்களில் சத்தீஸ்கர் மாநிலம், கன்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த சிப்பாய் கணேஷ் ராம் குஞ்சமும் (27) ஒருவராவர்.
இவரின் உடல் ராய்ப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் மதியம் 4.30 மணியளவில் கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த முதலமைச்சர் பூபேஷ் பாகல், இழப்பீடு தொகையாக ரூ.20 லட்சத்தை கணேஷ் தந்தையிடம் வழங்கினார்.
மேலும் கணேஷ் பிறந்த கிதாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு கணேஷ் நினைவாக அவர் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். வீரமரணம் அடைந்த கணேஷ் உடலுக்கு குடும்பத்தினர் உள்பட முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அங்கிருந்து அவர் உடல் ஹெலிகாப்டர் மூலம் அவரது கிதாலி கிராமத்திற்கு எடுத்துச் செல்ல தயாரானபோது, வீரரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை மற்றவர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் பூபேஷ் பாகலும் தனது தோளில் தூக்கி சுமந்து சென்றது நெகிழ்வை ஏற்படுத்தியது.
இந்நிகழ்வில் அம்மாநில உள் துறை அமைச்சர் தம்ரத்வாஜ் சாவூ, தலைமைச் செயலர், காவல் துறைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வீரமரணமடைந்த தெலங்கானா வீரருக்கு இறுதிச்சடங்கு!