கரோனா வைரஸ் தொற்று பரவலால் சீனாவை விஞ்சும் அளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்காவும், இத்தாலியும் உள்ளன. இந்த மோசமான சாதனையை எட்டிப்பிடிக்கும் நிலைக்கு ஸ்பெயினும் தள்ளப்பட்டுவிட்டது.
உலகம் முழுக்க கரோனா வைரஸ் தொற்று பீதி அனைத்து மக்களிடத்திலும் வயது வித்தியாசமின்றி காணப்படுகிறது. இந்த அச்சத்தை பயன்படுத்தி சில மருத்துவ நிறுவனங்கள் பொதுமக்களிடம் காசு பார்த்துவருகின்றன.
குறிப்பாக கரோனா வைரஸ் சோதனை கருவிகள் என்ற பெயரில் விளம்பரம் கொடுத்துவருகின்றன. இதற்கிடையில் சில மருத்துவ நிறுவனங்கள் தாங்கள் கரோனா தொற்றுநோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுப்பிடித்துவிட்டதாக மார்தட்டுகின்றன.
பலர் ஏற்கனவே இதுபோன்ற கருவிகளையும் மருந்துகளையும் வாங்கியுள்ளனர். இந்த போலி சோதனை கருவிகளுக்கான விற்பனை இணையவழி தளங்களில் நடக்கிறது. இதன் மூலம், கள்ள நோட்டு அச்சுறுத்தலையும் சந்திக்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் (கோவிட்19) நோய்த்தொற்றுக்கு உறுதியான மருந்து எதுவும் இல்லை. இந்த போலி தயாரிப்புகள் மற்றும் உரிமைகோரல்களிலிருந்து விலகி இருக்குமாறு குடிமக்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க அலுவலர்கள் தெரிவிக்கையில், “கரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க நாங்கள் மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இதற்கிடையில் சில நிறுவனங்கள் அங்கீகரிக்கப்படாத தயாரிப்புகளுடன் இந்த அவசரநிலையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றன.
இந்த தருணத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதுபோன்ற கள்ள தயாரிப்புகள் ஆன்லைன் விற்பனை கடைகளில் (ஸ்டோர்கள்) ஏராளமாக உள்ளன” என்றனர்.
மேலும், “கரோனா வைரஸூக்கு வீட்டு சோதனை நன்மை பயக்கும் என்றாலும் இதுவரை அந்தக் கருவி கண்டுப்பிடிக்கப்படவில்லை. இதனை அமெரிக்கா உறுதிப்படுத்துகிறது. ஆகவே இதுபோன்ற மோசடிகளில் சிக்கி யாரும் ஏமாற வேண்டாம்.
தொடர்ந்து இதுபோன்று நடைபெறும்பட்சத்தில், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வைரஸூக்கு மருந்து கண்டறியும் பணிகளில் அமெரிக்காவின் உயிரி தொழில்நுட்பவியல் (பயோடெக்) மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது” என்றனர். அமெரிக்காவைப் போன்று இந்தியாவிலும் இத்தகைய போக்குகள் காணப்படுகின்றன. கரோனா பாதிப்பிலிருந்து விடுபட மலேரியா மருந்துகளை வாங்க, மக்கள் வருகின்றனர்.
இதனால் அஜித்ரோமைசின் மற்றும் அமோக்ஸிசிலின் உள்ளிட்ட மருந்து மாத்திரைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. மலேரியா மற்றும் பருவகால ஒவ்வாமைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் குளோரோகுயின் மற்றும் லெவோசெடிரிசின் மாத்திரைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
மறுபுறம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகக் கூறும் புதிய மாத்திரைகள் சந்தையில் திரண்டு வருகின்றன. ஹோமியோபதி மருந்துகளை விற்கும் கடைகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
இந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்தவும் மக்கள் அச்சம் கொள்கின்றனர். இருப்பினும் வேறு வழியின்றி சாப்பிட துணிகின்றனர். ஆனால் பரிசோதனையற்ற மருந்துகளை உட்கொள்வது உயிருக்கு ஆபத்தானது. இதனை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே உள்ளனர்.
எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்ளும் முன்னர் மருத்துவரை அணுகுவது நல்லது. கரோனா (கோவிட்19) தொற்றை தடுக்க நிரூபிக்கப்பட்ட மருந்துகள் எதுவும் இல்லை. எனவே மக்கள் வதந்திகளை நம்புவதை நிறுத்திவிட்டு, எந்த முடிவும் எடுப்பதற்கு முன் சுகாதார நிபுணரை அணுக வேண்டும்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: கிராமங்களை காப்பதே, நாட்டின் வெற்றி!