சம்சுதீனின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த அவரின் குடும்பத்தாரும் உறவினர்களும் அவரை ஆரத் தழுவி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக வரவேற்றனர்.
கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை கடந்த அக்டோபர் 26ஆம் தேதி பாகிஸ்தான் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. அங்கிருந்து அவர் அமிர்சரஸில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்ட பின் பஜாரியா காவல் நிலைய காவலர்கள் அவரை கான்பூருக்கு அனுப்பிவைத்தனர்.
1992ஆம் ஆண்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியேறிய சம்சுதீன் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து டெல்லி சென்றார். சவுதி அரேபியா செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு 90 நாள் விசாவில் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் அங்கு ஏற்பட்ட கலவரத்தால் அவரின் விசா காலாவதியாகியுள்ளது. விசாவை புதுப்பிக்கச் சென்றால் எங்கே தன்னை சிறைப்பிடித்து விடுவார்களோ என்று அஞ்சிய சம்சுதீன் கையூட்டு கொடுத்து பாகிஸ்தான் தேசிய அடையாள அட்டை வாங்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காக நண்பர்களின் உதவியுடன் காலணி கடை ஒன்றையும் நடத்திவந்துள்ளார்.
அதையடுத்து 1994ஆம் ஆண்டு தனது மனைவியையும் இரு மகள்களையும் பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்துள்ளார். அனைவரும் அங்கே வசித்துக் கொண்டிருந்த வேளையில், 2002ஆம் ஆண்டு முஷாரப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அப்போது நிலைமை ஓரளவு சீரான பின் 2006ஆம் ஆண்டு தனது குடும்பத்தை மீண்டும் கான்பூருக்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதையடுத்து அங்கு ஆறு ஆண்டுகள் வசித்துவந்த சம்சுதீன் 2012ஆம் ஆண்டு கான்பூருக்குச் செல்ல வேண்டி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அவரைப் பிடித்த பாகிஸ்தான் அலுவலர்கள் சிறைப்பிடித்தனர்.
இந்திய ராணுவத்தின் ரகசிய முகவர் என நினைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் தான் ராணுவ அலுவலர் இல்லை என்று கூறிய பின் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்தார் எனக் கூறி 2012ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி கராச்சி சிறையில் அடைத்துவைத்துள்ளனர்.
எட்டு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சம்சுதீன் அக்டோபர் 26ஆம் தேதி இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.