தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோதகுடம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு. இவருக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு வெங்கடேஷ்வரலு வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன் பிறகு அவர் நெடுநாளாக வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடி அலைந்தனர். இதையடுத்து காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். காவலர்களும் வெங்கடேஷ்வரலுவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், வெங்கடேஷ்வரலு குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், முதியவர் வெங்கடேஷ்வரலுக்கு உணவு கொடுப்பதுபோல் இளைஞர்கள் இருவர் டிக் டாக் எடுத்து அதை வெளியிட்டிருந்தார். இந்த டிக் டாக்கை பார்த்த வெங்கடேஷ்வரலு குடும்பத்தினர் டிக் டாக் வெளியிட்ட இளைஞர்களை தொடர்புகொண்டு வெங்கடேஷ்வரலு குறித்த தகவல்களை கேட்டறிந்தனர். அப்போது பஞ்சாப் சாலைகளில் அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிறப்பு அனுமதி பெற்று பஞ்சாப்பிற்குச் சென்று காவல் துறை உதவியுடன் வெங்கடேஷ்வரலுவை அவரது குடும்பத்தினர் மீட்டுவந்துள்ளனர். பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவர் டிக் டாக் மூலம் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இந்த ரணகளத்திலேயும் டிக்-டாக்- பெண் கைது!