கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரில் 89 வயது முதியவரான பி.ஜி.ஜார்ஜ் என்பவர் சிறுநீரகத் தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை முடிந்து நேற்று (ஏப்ரல் 15) வீடு திரும்ப இருந்தார்.
இதையடுத்து அவரது மகன் ராய்மோன் தனது தந்தை, தாய் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தார்.
காவலர்களின் கெடுபிடி
அப்போது, புனலூர் பகுதியில் நின்றிருந்த காவல் துறையினர் அவர்கள் வந்த ஆட்டோவை நிறுத்தி, ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு அனுமதியில்லை என கூறினர். பின்னர் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வந்த முறையான ஆவணங்களை காண்பித்த பிறகும் கருணை காட்டாத காவலர்கள் அவர்கள் செல்ல அனுமதியளிக்கவில்லை.
தந்தையை தோளில் சுமந்த மகன்
இதனால் செய்வதறியாமல் மூவரும் திகைத்தனர். காவலர்களுக்கு பயந்து மற்ற ஆட்டோ ஓட்டுநர்களும் இவர்களுக்கு உதவவில்லை. இதையடுத்து, ராய்மோன் தனது தந்தையை தோளில் தூக்கிக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது தொடர்பாக, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து மாவட்ட காவல் துறை தலைவர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க:சொந்த ஊர்களுக்கு தலைநகரிலிருந்து நடந்தே செல்லும் தொழிலாளர்கள்