குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் சிஏஏ-வுக்கு எதிராக அமைதியான முறையில் கடந்த ஒரு மாத காலமாக மக்கள் போராடிவருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை ஐந்து மணியளவில், ஷாஹீன் பாக் பகுதிக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். நல்வாய்ப்பாக இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை.
துப்பாக்கியால் சுட்ட நபரை காவல் துறையினர் உடனடியாகப் பிடித்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தென் கிழக்கு டெல்லி துணை ஆணையர் சின்மயி பிஸ்வால் கூறுகையில், "துப்பாக்கியல் சுட்ட நபரை விசாரித்துவருகிறோம். அவர் பெயர் சிபில் என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு - எப்போது தூக்கு? டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்