போபால்: சிங்பூர் காவல் நிலையத்திலிருந்த கைதியை தவறுதலாக காவலர் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம், மாநிலம் சிங்பூர் காவல் துறையினர் நேற்று (செப்.27) கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்பட்ட ராஜபதி குஷ்வாஹா என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, காவலர் ஒருவர் தவறுதலாக கையிலிருத்த துப்பாக்கியை அழுத்தியதில் ராஜபதி குஷ்வாஹா மீது குண்டு பாய்ந்துள்ளது.
உடனடியாக, ராஜபதியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ராஜபதியின் குடும்பத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
சந்தேக வழக்கில் அழைத்து சென்றவரை சுட்டுக்கொன்ற காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.