உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டில், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை, பாஜக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வல்லுறவு செய்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே, சிறுமியின் தந்தை காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், சர்ச்சைக்குரிய வகையில் விசாரணையின்போது உயிரிழந்தார்.
பின்னர், குல்தீப் சிங்கை காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே, குல்தீப் சிங் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய்க்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி கடிதம் எழுதினர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் தவறான தகவல் அளித்ததாகக் கூறி அவர்களுக்கு எதிராக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அச்சிறுமி, அவரது உறவினர்கள் சென்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் அவரது உறவினர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குல்தீப் சிங் திட்டமிட்டு செய்தது என்ற குற்றச்சாட்டுகள் பல்வேறு தரப்பில் இருந்து கடுமையாக எழுந்தது. அதனால் பாஜக தலைமை அவரை பதவிநீக்கம் செய்தது. அதையடுத்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளராக கருதப்படும் அவ்தேஷ் பிரதாப் சிங் விபத்தில் சிக்கியுள்ளார். நவம்பர் 22ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தபோது, டிரக் ஒன்று தன் காரை மோதியாதாக பிரதார் சிங் கூறியுள்ளார். இருமுறை அந்த டிரக் தன் காரை இடிக்க முயற்சித்ததாக அவர் தெரிவித்துள்ளார். உன்னாவ் வழக்கின் சாட்சியாளர் என்பதால்தான் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உன்னாவ் வழக்கின் முக்கிய சாட்சியாளர் என்ற வாதத்தை காவல் ஆய்வாளர் வர்மா முழுவதுமாக மறுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்: ராஜ்நாத் சிங்