கொல்கத்தா: மேற்கு வங்க அரசின் இரண்டு மசோதா குறித்து விவாதிக்க ஆளுநர் ஜகதீப் தங்கர் அழைப்புவிடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பணிச்சுமை காரணமாக மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஜகதீப் தங்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டது முதலே மம்தா பானர்ஜி அரசுடன் மோதல்போக்கு நிலவிவருகிறது. இந்நிலையில் மேற்கு வங்க அரசு நிறைவேற்றிய இரண்டு மசோதாக்கள் குறித்து ஆலோசிக்க மேற்கு வங்க ஆளுநர் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடர் முயற்சிகளுக்கு பின்னும் மேற்கு வங்க அரசு நிறைவேற்றியுள்ள இரண்டு மசோதாக்கள் குறித்து தேவையான தகவல்களைச் சட்டப்பேரவை எனக்கு வழங்கவில்லை. ஆகவேதான் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுகிறது" என்று கூறியிருந்தார். சமீபத்தில்...
- மேற்கு வங்கம் (கும்பல் வன்முறை தடுப்பு மசோதா), 2019
- மேற்கு வங்காள மாநிலம் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான ஆணைய மசோதா, 2019
தொடர்பாக அரசு இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றி, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஆளுநர் அறிக்கைவிடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னனும், இடதுசாரிகள் தலைவர் சுஜன் சக்கரவர்த்தியும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை வரும் ஜனவரி 21ஆம் தேதி நடத்துமாறு கோரிக்கைவிடுத்ததையும் ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பணிச்சுமை காரணமான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்று முதலமைச்சர் அலுவலகம் சார்பில் ஆளுநரின் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர், வீட்டுச் சிறையிலிருந்து நால்வர் விடுவிப்பு