இதுகுறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதள பதிவில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”மாநிலத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 44 பேர் கரோனா நோய் தொற்றால் இறந்துள்ளனர். சிறிய மாநிலமான புதுச்சேரியில் 44 பேர் இறந்திருப்பது வேதனை அளிக்கிறது. தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காதது, முகக்கவசம் அணிந்து சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றாததுதான் உயிரிழப்புக்கு காரணமாக அமைகின்றது.
உயிரிழப்புகள் தனிநபர்களின் அலட்சியப் போக்கினால் ஏற்படுகின்றது. பொது இடங்களில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மூக்கினை மறைத்தபடி முகக்கவசம் அணிய வேண்டும்.
பொது இடங்களில் தகுந்த இடைவெளி பின்பற்றப்படவில்லை. இதனை நானே நேரில் கண்டுள்ளேன். கைகளை சுத்தம் செய்யாமல் வாய், முகங்களை தொடுகின்றனர், இதன் காரணமாகவும் தொற்று ஏற்படுகின்றது. இப்போது அதிக எண்ணிக்கையில் தொற்று கண்டறியும் சோதனை செய்கிறோம். ஒவ்வொன்றின் விலையும் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
புதுச்சேரியில் பார்கள் திறக்கப்பட உள்ளன. எனவே தொற்று மேலும் பரவாமல் இருக்க கலால் அலுவலர்கள், காவல் துறையினர் பார்களில் தீவிர ஆய்வு நடத்தி வீடியோவில் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். விதிமுறை மீறல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.