மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக ஃபிரான்ஸ் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இந்தியாவிற்காக தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட்டது.
670 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்த விமானத்திற்கு மலர்களும் தேங்காய்களும் வைத்து ராஜ்நாத் சிங் சாஸ்த்ரா எனப்படும் சிறப்பு பூஜை செய்தார். இது எதிர்க்கட்சியினரிடையும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்திற்கும் கிண்டலுக்கும் உள்ளானது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அமைச்சர் ராஜ்சிங்கின் இந்தச் செயலை கேலி செய்துள்ளார். இது குறித்துப் பேசிய பாஜக மூத்தத் தலைவர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் மக்களிடம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார்.
அக்கட்சியினர் இந்தியா, இந்து கலாசாரங்களை கேலிக்குள்ளாக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளாத தெரிவித்த சிவராஜ் சிங் சவுகான், அவர்களுக்கு இந்திய கலாசாரத்திலும் இந்து மத நம்பிக்கைகளிலும் என்ன இடையூறு உள்ளதென என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஃபேல் விமானத்திற்கு சாஸ்த்ரா பூஜை செய்ததில் என்ன தவறு உள்ளது எனக் கேட்ட அவர், காங்கிரஸ் கட்சியினர் குறிப்பாக அவர் எழுதிய ஓம் என்ற சொல்லை மையப்படுத்தி விவாதம் நடத்துவதும் ஏன் என்றும் வினா எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவராஜ் சிங் சவுகான் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பூஜை போட்டு ரஃபேலில் பறந்த ராஜ்நாத் சிங்!