மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 35க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
மழை காரணமாக மும்பை நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மக்கள் வீட்டிற்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ரயில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கனமழையால் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள திவாரே அணை நேற்று நள்ளிரவு உடைந்தது. இதனால் அந்த அணையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அணைக்கு அருகே இருந்த 12 வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அணையின் உடைப்பு குறித்து அறிந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நள்ளிரவு முதல் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது 6 பேரின் சடலங்களை பேரிடர் மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர். மேலும், வெள்ளத்தில் காணாமல் போன 20க்கும் மேற்பட்டோரை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.