நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அரசு மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. இதனால், பிற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்துள்ள சாண்டிவலி பகுதியை சேர்ந்த கர்ப்பிணியை ஒருவர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்க சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பெண்ணிற்கு உதவிய மருத்துவர் கூறியதாவது, பிரசவ வலியால் துடித்த பூஜா என்பவரை முதலில் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அங்கு அவரை மருத்துவமனைக்கு உள்ளேயே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். அதன்பிறகு, ராஜாவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம், அங்கேயும் கரோனா நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளதை காரணம் காட்டியும், போதிய படுக்கை வசதி இல்லை எனக் கூறியும் மருத்துவமனையில் சேர்க்க மறுத்துவிட்டனர்.
தனியார் மருத்துவமனையில் சேர்த்தால் லட்சக்கணக்கில் செலவாகும் என்பதால், வேறு வழியின்றி வீட்டிற்கே திரும்ப சென்றுவிட்டனர். இதனையடுத்து, அவருக்கு வீட்டிலேயே நடந்த பிரசவத்தில் குழந்தை பிறந்தது என்றார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை கரோனாவால் 44 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டும், 3 ஆயிரத்து 169 பேர் உயிரிழந்துள்ளனர்.