மஹாராஷ்டிரா மாநிலம் கங்காவேலி கிராமத்தில் மும்பை -கோவா வரை செல்லும் சாலைப்பகுதியில் குண்டும் குழியுமாக கிடக்கும் இடங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பிரகாஷ் சேதகே சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ நிதிஷ் ரானே ஆய்வு மேற்கொண்ட பொறியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாற, பொறியாளர் பிரகாஷ் சேதேகாவிற்கும் எம்எல்ஏ நிதிஷ் ரானேவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு கூடியிருந்த எம்எல்ஏ நிதிஷ் ரானேவின் ஆதரவாளர்கள் பொறியாளருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே பக்கெட்களில் தயார் நிலையில் வைத்திருந்த சேற்று நீரை பொறியாளர் பிரகாஷ் சேதேகா மீது ஊற்றியுள்ளனர். சேற்று நீரை ஊற்றியதோடு மட்டும் இல்லாமல் அவரை அந்த பாலத்தில் கட்டி வைக்கவும் முயற்சி செய்துள்ளனர். தற்போது இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் காங்கிரஸ் எம்எல்ஏ நிதிஷ் ரானேவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எம்எல்ஏ நிதிஷ் ரானே மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயண ரானேவின் மகன் ஆவார். இதுபோன்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலரை பாஜக எம்.பி. கைலாஷ் விஜயவர்கியாவின் மகன் ஆகாஷ் கிரிக்கேட் பேட்டால் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனங்களும் எழுந்தன. பிரதமர் மோடி இதற்கு முதலமைச்சர் மகன் செய்தாலும் இது தவறுதான் எனக் கண்டித்தார்.
இந்நிலையில்,தொடர்ந்து அரசு அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவங்களை பார்த்த நெட்டிசன்கள் பாஜக பேட் எம்எல்ஏ, தற்போது பக்கெட் எம்எல்ஏ என கிண்டல் அடித்து வருகின்றனர்.