மகாராஷ்டிராவில் பீமா நதிக்கரையில் 1818ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தலித் (மஹர்) வீரர்கள் அடங்கிய பிரிட்டிஷ் படைகளுக்கும், உயர் சாதியினர் என்று கூறிக்கொள்ளுபவர்கள் அடங்கிய பேஷ்வா படைகளுக்கும் போர் நடைபெற்றது. அதில் தலித்துகள் அடங்கிய பிரிட்டிஷ் படைகள் வென்றன. அதன் நினைவாக பீமா கோரேகான் என்ற இடத்தில் போர் நினைவுத்தூண் எழுப்பப்பட்டது. ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதியன்று தலித் மக்கள இந்த நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இச்சூழலில், போர் நடைபெற்று 200 ஆண்டுகள் முடிந்த நாளில் (ஜன.1) அஞ்சலி செலுத்த வழக்கம்போல் தலித் மக்கள் அங்கே வந்திருந்தனர். அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்துகொண்டிருந்த வேளையில், யாருமே எதிர்பாராவிதமாக ஆதிக்க சாதியினர் அங்கு வந்தனர். கண்ணிமைக்கும் நொடிக்குள் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் வன்முறையை நிகழ்த்தினர். இந்தத் தாக்குதலில் பெரும்பாலான தலித் மக்கள் காயமடைந்தனர்.
நாடு முழுதும் அதிர்வலையை எழுப்பிய இந்த வன்முறைச் சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்த புனே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினர் 7500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையையும் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இந்தக் கலவரத்தைத் தங்களது தொண்டர்களை ஏவி விட்டு ஏற்படுத்தியதாகக் கூறி இந்துத்துவ அமைப்புகளின் (சம்ஸ்த் ஹிந்து அகாதி, ஷிவ் பிரதிஷ்தான்) தலைவர்களான மிலிந்த் எக்போடே, சம்பாஜி பிடே ஆகியோர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
இதில் எக்போடேவை பிணையில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிடே கைது செய்யப்படவில்லை. புனே காவல் துறையினர் மற்றொரு கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர். நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு ஒருநாள் முன்னதாக (டிச.31,2017) நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டிற்கும் கோரேகான் கலவரத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்றும் விசாரணை செய்தனர். அதன் விளைவாக மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகக் கருதி ரோனா வில்சன், சுதா பரத்வாஜ் உள்ளிட்ட ஒன்பது சமூக செயற்பாட்டாளர்களையும் இவர்களுக்கு உதவியதாகக் கூறி ஆனந்த் டெல்டும்டெ, கௌதம் நவலாகா ஆகிய எழுத்தாளர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்தச் சூழலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இவ்வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையின் கீழ் சிறப்பு புலனாய்வுக் குழுவை (Special Investigation Team) உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதை அடுத்து, இவ்வழக்கின் நிலை குறித்து ஆராய்வதற்கு துணை முதலமைச்சர் அஜித் பவார், உள்துறை அமைச்சர் தேஷ்முக் ஆகிய இருவரும் மூத்த காவல் அலுவலர்களை இன்று சந்திக்கவுள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கின் தன்மை குறித்து அறிந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
1927ஆம் ஆண்டு அம்பேத்கர் கோரேகானில் நினைவு அஞ்சலி செலுத்திவிட்டு, அவர் தலித் மக்களிடம் இனி ஒவ்வொரு ஆண்டும் இங்கே வந்து முன்னோர்களை நினைவுகூரும் விதமாக அஞ்சலி செலுத்தி வரலாற்றை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார். அன்றிலிருந்து இன்று வரை தலித் மக்கள் கோரேகான் வந்து நினைவு அஞ்சலி செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் சீரழியும் ஜனநாயகம்... வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்