மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைப்பதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளிடையே கூட்டணி அமைக்கப்பட்டு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவில் அதிகளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் மகாராஷ்டிரா.
அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் மகராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்தது. வெங்காயத்தின் விளைச்சல் குறைந்ததால், அதன் விலையேற்றம் மத்திய, மாநில அரசுகளை ஆட்டம் காண வைத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி, மழை என விவசாயிகள் வாழ்க்கை போராட்டத்தோடு சிக்கலில் தவித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசின் கடைசி குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (டிச.21) நடைபெற்றது. சட்டப்பேரவையில் பேசிய உத்தவ் தாக்கரே, 2019ஆம் ஆண்டு செப்.30ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். இந்தத் திட்டம் மகாத்மா ஜோதிராவ் பூலே கடன் தள்ளுபடி திட்டமாகும்.
அதேபோன்று கடனை உரிய நேரத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை திட்டம் அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ஷிவ் போஜன் என்ற திட்டத்தில் பத்து ரூபாய் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் முதல் கட்டமாக 50 இடங்களில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சிவசேனா ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று உத்தவ் தாக்கரே வாக்கு கொடுத்திருந்தார். அதனை செயல்படுத்தியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. காரணம், விவசாயக் கடன் முழுமையான தள்ளுபடி இல்லாதது அதிருப்தியளிக்கிறது என முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராம் லீலா மைதானத்தில் மோடி உரை: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!