மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்துவந்த ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு இடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்துவந்தது. இதையடுத்து, சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இதற்கிடையே, அவரது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 22 பேர் பெங்களூருவிற்குச் சென்று தஞ்சமடைந்தனர். பின்னர், அவர்கள் தங்களுது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இந்நிலையில், மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
ஆளுநரின் உரைக்கு பிறகு, கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறி பாஜக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அவையை மார்ச் 26ஆம் தேதி வரை ஒத்திவைத்து ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கோரி மீண்டும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: 'ம.பி., யில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' - உச்ச நீதிமன்றத்தில் பாஜக மனு