போபால்: அடுத்த 10 நாட்களுக்கு தென் மாநிலங்களில் இருந்து வரும் கோழி இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பரவுவது தொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘மாநிலத்தில் பறவை காய்ச்சல் நிலவரம் குறித்து ஆய்வு செய்தேன். இது தொடர்பாக கவலைப்படுவதற்கான சூழல் எதுவும் இல்லை. இந்த சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
மாநிலத்தில் கோழிப்பண்ணைகள் அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இயங்க வேண்டும். அவற்றை தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறவை காய்ச்சலை கருத்தில்கொண்டு 10 நாட்களுக்கு மட்டும் கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் வாத்துகளிலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காகங்களிலும், இமாச்சல பிரதேசத்தில் புலம்பெயர் பறவைகளிலும் இந்த தொற்று நோய் பரவிவருவதாகக் கூறப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சலுக்கு 1,700-க்கும் அதிகமான வாத்துகள் உயிரிழந்திருக்கின்றன.
பறவை காய்ச்சல் தொடர்பாக, மத்திய கால்நடை வளர்ப்புத் துறையின் சார்பில், டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் பரவியுள்ள, நான்கு மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாயிலாக, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, பறவை காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.