உத்தரப் பிரதேச முதலமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான யோகி ஆதித்யநாத், லவ் ஜிஹாத் மற்றும் பலவந்தமான மத மாற்றத்தை கட்டுப்படுத்த தனது அரசு கடுமையான சட்டத்தை கொண்டுவரவுள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார்.
அதேபோல, மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் உள் துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, லவ் ஜிஹாத்திற்கு எதிரான மசோதாவை அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார்.
அவ்விருவரின் கருத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், "திருமணம் என்பது தனிப்பட்ட நபரின் சுதந்திரம். அதைக் கட்டுப்படுத்த ஒரு சட்டத்தைக் கொண்டுவருவது முற்றிலும் அரசியலமைப்பிற்கு விரோதமானது. அது எந்த நீதிமன்றத்திலும் நிற்காது. காதல் என்பதே அன்பால் நிலைத்து நிற்கும் ஒன்று. அது ஜிஹாத் இல்லை.
லவ் ஜிஹாத் என்பது தேசத்தை பிளவுபடுத்துவதற்கும், வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கும் பாஜக உருவாக்கிய ஒரு சொல். பாஜகவினர் ஒட்டுமொத்தமாக நாட்டில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கி வருகிறார்கள்.
அவர்கள் மக்களிடையே, வகுப்புவாத வெறுப்புணர்வைத் தூண்டி சமூக மோதலுக்கு வித்திடுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றியமைக்க சதி நடைபெறுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.