கரோனா பரவலால் நாடு முழுவதும் மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் அவை திறக்கப்பட்டன. ஆரம்பத்தில் பூசாரிகள் மட்டும் பூஜை செய்ய கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (நவ.16) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரிமலையில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.15) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கோயிலுக்குள் வர பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பம்பையில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் தினம்தோறும் 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சனி, ஞாயிறு நாள்களில் 2,000 பேரும் மண்டல, மகரவிளக்கு பூஜை நாள்களில் 5,000 பேரும் அனுமதிக்கப்படுவர். மேலும், கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.