இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றால் நாட்டில் சமூகப் பரவல் ஆரம்ப கட்டத்திற்குள் நுழைந்துவிட்டதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) சில நாள்களுக்கு முன் தெரிவித்தது. மேலும், இந்தியாவில் சில பகுதிகளில் சமூக பரவலை பதிவு செய்யத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்த அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் ரன்தீப் குலேரியா, “நாட்டில் கரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியதற்கான எந்த விதமான ஆதாரமும் இல்லை. இருப்பினும், நாடு முழுவதும் பல பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவில் சமூக பரவலைக் கண்டறிவதற்கு அதிக ஆதாரங்கள் இல்லை. தேசிய அளவிலான சமூக பரவல் குறித்து எவ்வித தரவுகளும் இல்லை. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) தரவுகளும் தேசிய அளவில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல்களை மறுத்துள்ளன.
மிகக் குறைந்த பாதிப்புகளைக் கொண்ட பல மாநிலங்களை இதற்கு சாட்சியாக கூறலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் இந்தியாவில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது என்று கூறுவது பொருத்தமானதல்ல. கட்டுப்பாட்டு மண்டலங்களில் அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று தொடர்ந்து கூறி வருகிறோம். வீட்டுக்கு வீடு சுகாதார கணக்கெடுப்புகளும் அவசியம். இதற்கிடையில், டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை, கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை மனிதர்களிடம் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக, 18 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான மக்கள் மீது பரிசோதனை செய்யப்படும். இதற்காக மொத்தம் ஆயிரத்து 125 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 375 மாதிரிகள் முதல் கட்டத்திலும், 12 முதல் 65 வயதுக்குட்பட்ட 750 மாதிரிகள் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்படுவர். முன்னதாக, பாட்னா (பிகார்), ரோஹ்தக் (ஹரியானா) ஆகிய பகுதிகளில், கோவாக்சின் மனித சோதனை தொடங்கப்பட்டது. இந்த தடுப்பு மருந்து இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இருக்கும்" என்றார்.
நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் மும்பை, கோவா, டெல்லி, குஜராத், தெலங்கானா, அஸ்ஸாம், கர்நாடகா, பிகார், ஆந்திரா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில் 43 பெரிய மருத்துவமனைகளுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆதரவளித்துள்ளது.