தலித் மக்களின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வானின் மறைவுக்குப் பிறகு பிகாரில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் காலியாகிவிட்டது. இந்நிலையில், அந்த இடத்திற்கான இடைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதாக அறியமுடிகிறது.
இடைத்தேர்தலில், என்.டி.ஏ வேட்பாளர் சுஷில் குமார் மோடிக்கு எதிராக மறைந்த ராம் விலாஸ் பாஸ்வானின் மனைவி ரீனா பாஸ்வான் போட்டியிட்டால் அவரை நிபந்தனையின்றி ஆதரிக்க தயார் என ஆர்.ஜே.டி நட்புக்கரம் நீட்டிருந்தது.
இந்நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள சிராக் பாஸ்வான், “ஆர்.ஜே.டியின் உறுப்பினர்கள் எல்.ஜே.பியின் வேட்பாளரை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்காக அவர்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் எல்.ஜே.பி இந்த மாநிலங்களவை இடைத்தேர்தலில் போட்டியிடாது.
இந்த இருக்கையை எங்கள் மரியாதைக்குரிய தலைவர், மறைந்த ராம் விலாஸ் பாஸ்வான்ஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்த்து. தற்போது, அவர் எங்களுடன் இல்லை. இனி அந்த இடத்தை யாருக்கு வழங்குவது என்ற முடிவை பாஜக தான் எடுக்கும்" எனக் கூறியுள்ளார்.
மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 'குட் பட் லேட்'- விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய அசோக் கெலாட்!